நாட்டு நடப்பில் நமது அதிரடி

Thursday, July 27, 2006

நாடக அடி

நாட்டுப் பற்று என்பது தங்களின் ஒட்டு மொத்தக் குத்தகைச் சரக்கு என்று 'பம்மாத்து'ப் பண்ணிக் கொண்டிருக்கும் சங் பரிவார் பீ.ஜே.பீ கும்பலின் மற்றொரு நாடகம் இவ்வாரம் அரங்கேறியது.

பீ.ஜே.பீ அரசில் அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் ஸிங் எழுதியுள்ள நூலில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கருத்து உண்மையாகவே நாட்டுப் ப்ற்றறுள்ளவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது! நரசிம்மராவ் பிரதமராக இந்நாட்டை ஆண்டபோது அவரது அலுவலகத்தில் பணியாற்றிய ஓர் உயர்நிலை அலுவலர் இந்தியாவின் அணு ஆயுத இரகசியங்களை அமெரிக்காவுக்குக் கொடுத்தார்; அது பத்தாண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும் என்று ஜஸ்வந்த் ஸிங் தம் நூலில் கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கமளிக்க ஊடகத்தினரைச் சந்தித்தபோது, அமெரிக்காவின் உளவாளியாகச் செயல் பட்ட அந்த உயர்நிலை அலுவலரின் பெயரைச் சொல்ல மறுத்து விட்டார். பிரதமர் மன்மோஹன் ஸிங்கிடம் மட்டுமே அவர் பெயரைத் தெரிவிப்பேன் என்றும் பூசி மெழுகியுள்ளார்.

இது குறித்துக் கருத்துச் சொல்லவோ அல்லது உண்மையை உரைக்கவோ நரசிம்ம ராவ் இன்று நம்மிடையே இல்லை என்பது ஜஸ்வந்த் ஸிங்கின் முதல் தைரியம். அவர் குறிப்பிடும் அந்த முன்னாள் உயர்நிலை அலுவலரும் இந்தியாவிலேயே இல்லை என்று அவரே கூறிவிட்டார். இது ஜஸ்வந்த் ஸிங்கின் இரண்டாவது தைரியம்.

இந்நிலையில் இவர் தம் நூலில் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து ஊடகத்தினர் பல்வேறு வினாக்களைத் தொடுத்தனர். "பத்தாண்டுகளுக்கு முன்பே அமெரிக்க உளவாளி பற்றித் தெரிந்திருந்தும் நீங்கள் ஆண்ட காலத்தில் ஏன் அவ்வுளவாளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை?" என்ற வினாவுக்கு,"அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்த இரகசியங்கள் தலையாயவை அல்ல" என்று விடையிறுத்துள்ளார்.

அத்தனை முதன்மை வாய்ந்த இரகசியம் இல்லை என்றால் இப்போது- பத்தாண்டுகளுக்குப் பின்- அதைப் பற்றி எழுதி வீணான ஒரு பரபரப்பை உருவாக்கியது ஏன்?

உளவு சொன்ன உயர்நிலை அதிகாரியின் பெயரைப் பிரதமரிடம் மட்டும்தான் தெரிவிப்பாராம். இது என்ன ஆரியக் கூத்தா?

நாட்டுப் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் ஒரு குற்றம் பற்றிய செய்தியைப் பொத்தாம் பொதுவாக ஒரு நூலில் குறிப்பிடுவாராம்; அது பற்றி மேல் வினா வரும்போது பிரதமரிடம் மட்டும் சொல்வேன் என்பாராம். இது மன்மோஹன் ஸிங்கின் வீட்டு அடுக்களையில் தேங்காய் மூடி திருடிய செயலில்லை- அவரிடம் மட்டும் சொல்வதற்கு. நாட்டு அணு ஆயுத இரகசியத்தைத் திருடிய செயல். அது பற்றி அறியும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. அதை மறைக்கும் உரிமை ஜஸ்வந்துக்கு இல்லை.

இந்திய நாடு விடுதலை பெற்ற பின் அதன் இராணுவம் மற்றும் ஆயுத இரகசியங்களை எதிரிகளுக்கு விற்றவர்கள் என்று பிடிபட்டவர்களில் மிகவும் பேர் பெற்றவர்கள் நாராயணன், சங்கரன், கோபாலன் ஆகியோரே. இவர்கள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய உயர்நிலை அலுவலர்கள் ஆவர். நாட்டுப் பற்று எமக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடும் உயர் சாதியினர்.(இவர்கள்தான் இது போன்ற அரசுத் துறைகளில் உயநிலைப் பதவியில் வரமுடியும்) சிறுபான்மையினரோ அல்லது இந்து சமய சாதி அடுக்கில் கீழ் நிலையில் உள்ளவர்களோ இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகப் புகாரில்லை.

இப்போது ஜஸ்வந்த் மூடி மறைக்கப் பார்க்கும் பெயரும் இத்தகையதுதானோ?

வெளி உளவுத்துறை (R A W) யில் உயர் நிலை அலுவலராக (D I G )ப் பணியாற்றிய உண்ணி க்ருஷ்ணன் என்பவர் அமெரிக்காவின் உளவாளியாகவும் செயல்பட்டார் என்பதற்காகக் கைது செய்யப் பட்டுப் பதவி நீக்கம் செய்யப் பட்டார். டெல்லி திகார் சிறையிலும் அடைக்கப் பட்டார்.அது போல இவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அவ்வுளவாளி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காது விட்டுவிட்டு - அவர் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதித்து விட்டு - இப்போது அதைப் பற்றிக் கூறுவது பரபரப்பு நாடகமே அன்றி வேறில்லை.

பிரதமராகப் பதவி வகித்த வாஜ்பேயும் துணைப் பிரதமராயிருந்த ஆட்வாணியும் ஊடகங்களால் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கப் பட்டிருக்கும் இக்காலச் சூழலில் தாங்கள் இருப்பதை மக்களுக்கு நினைவூட்ட ஏதாவது செய்ய வேண்டியது பீ.ஜே.பீயினருக்கு இப்போது கட்டாயமாய் ஆகிப் போனது. ரத யாத்திரை நடத்துவது, அவ்வப்போது அயோத்திப் பிரச்சனையைக் கிளப்புவது, அல்லது கட்சியின் உயர்நிலைத் தலைவர்களைக் களையெடுப்பது எனச் செய்து அலுத்தபின் இப்போது நூல் எழுதிப் பரபரப்பு நாடகம் நடத்துகின்றனர்.

காதாசிரியர் ஜஸ்வந்த் ஸிங்கின் இந்தத் தோல்வி நாடகத்தை அதிக நாட்கள் ஓட்ட முடியாது என்பதால், வில்லன் மதன்லால் குரானா இணைந்து வழங்கும் அடுத்த நாடகத்தை விரைவில் எதிர் பார்ப்போமாக!