நாட்டு நடப்பில் நமது அதிரடி

Thursday, December 01, 2005

தமிழ்ப் பண்பாட்டு அடி

திரடியின் முதலடியை எங்கு அடிப்பது என்று நம்மைச் சிந்திக்கவே விடாமல் செய்து விட்டார் தமிழடி திரு. தொல். திருமாவளவனார். இந்த முதலடியைக் கவர்ச்சி அடியாய் அடிப்பதற்கு 'அடி' எடுத்துக் கொடுத்தவர், தமிழடி திரு. தொல். திருமாவளவனார் ஆவார்.

தமிழர்களுக்குத் திரைப்படம் தானே கவர்ச்சி. (அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜி-ஆர், ஜெயலலிதா, சமீபத்திய விஜயகாந்த், கார்த்திக் வரை தமிழகத்து அரசியல் என்பது, சினிமாவையே சார்ந்துள்ளது) . நடிகையர் என்றால் சொல்லவே வேண்டாம், பெருங்கவர்ச்சி தான். அதிலும் அதீதக்கவர்ச்சி குஷ்பு. குஷ்புவுக்குக் கோயில் கட்டிக் கும்பிட்டவர்களாயிற்றே தன்மானத் தமிழர்கள். சமீப காலமாகக் குஷ்புவின் கவர்ச்சிக்கு மகுடமாய் அமைந்திருப்பது, " கன்னித் தன்மையைப் பற்றிக் கவலைப்படாமல், கற்பைக் காற்றில் பறக்க விட்டுக் கண்டவனுடனும் கூத்தடிக்கலாம்-கருவுறாமல் மட்டும் காத்திடுக" எனும் அவரது கூற்று.

குஷ்புவுக்கு எதிராக, பாட்டு, எதிர்ப்பாட்டு, லாவணி, ஒப்பாரி, கும்மி, கோலாட்டம், சாலை மறியல், செருப்பு, துடைப்பம், கொடும்பாவி, ஒழிக, திரும்பிப்போ முழக்கங்கள் என அனைத்துக் கலை வடிவங்களும் தமிழகமெங்கும் அரங்கேறின. இந்தியாவில் வெளியாகும் அனைத்து மொழி, தின, வார, மாத இதழ்களும் இணையதளங்களும் இதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதிவிட்டன. இனி நாம் இதைப் பற்றி எழுதினால் அடித்த இடத்திலேயே அடிப்பதாகவே ஆகும். (நாம் அடிக்கப் போகும் இடமே வேறு.)

மழை விட்டும் வெள்ளம் வடியவில்லையென்றோ (தமிழகத்தில் மழை விட்ட பின்னரும் பாதிக்கப் பட்ட பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை என்பது இன்றைய நிலவரம்) வேதாளம் மீண்டும் வீட்டு மாடியில் ஏறிவிட்டது (எத்தனைக் காலத்திற்குத்தான் அது முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டிருப்பது?) என்றோ சொல்லும்படி, குஷ்பு மன்னிப்புக் கேட்டு இடைவேளை விட்டதை நடிகை சுஹாசினி மீண்டும் தொடங்கி வைத்தார். குஷ்புவும் அதை ஆதரித்தார். மாவு புளித்தாலும் பணியாரம் சுடச்சுடக் கிடைத்தது. இப்போதும் தமிழகத்து வழக்கு மன்றங்களில் வழக்குப் பதிவுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், மலையாள நடிகை நவ்யா நாயர் மீதுள்ள சினத்தால் பத்திரிகையாளரைக் கூட்டி நடிகையரை விபச்சாரிகள் எனப்பொருள் படும்படி பேட்டி கொடுத்தபோது, தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் யாரும் வாய் திறக்கவில்லை. ஏனெனில், நடிகையரில் பெரும்பாலோர் தமிழச்சிகளல்லர். ஆனால் தமிழச்சி அல்லாத(?) வடநாட்டுக்காரி குஷ்புவின் தலைமையில் தங்கர் பச்சானை மன்னிப்புக் கேட்க வைத்தபின், தமிழ்ப் பாதுகாப்பாளர் திருமாவளவன் காட்சிக்குள் நுழைகிறார்.

திரைப்படத்தில் திடீர் திருப்பம், எதிர்பாராக் காட்சிமாற்றம் என்று வருவது போல் இதிலும் ஒரு திருப்பம் (சாலையின் கொண்டையூசி வளைவுபோல) வந்தது. தங்கர் நின்ற இடத்தில் குஷ்பு; குஷ்பு நின்ற இடத்தில் திருமாவளவன்.....

இதனைச் சமய நம்பிக்கையுடையோர் 'விதி' என்றோ தமிழ் நெறியாளர்கள் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்றோ கூறிக் கொள்ளலாம். இவையெல்லாம் புளித்த அடி. இங்கு அடிக்கப் போவது புது அடி.

நம் மக்களின் பெயரைத் தமிழ்ப் படுத்துவதாலோ, திரைப்படங்களின் பெயரைத் தமிழில்தான் வைக்க வேண்டும் என்று போராடுவதாலோ தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப் படுவதில்லை.

பெயர் ஓர் அடையாளம் மட்டுமே.

அழைக்கப் படுவதற்குரிய ஒரு கருவியே பெயர். அவ்வளவுதான்.

பள்ளி, கல்லூரிகளிலும் காவல் நிலையங்களிலும் பெயர் 'பெற்றவர்களின்' வருகைப் பதிவுகள் எண்களில்தான் பதியப் படுகின்றன. சிறைக் கைதிகளும் எண்களால்தான் அறியப்படுகின்றனர். எண்களோ பெயர்களோ அவை வெறும் அடையாளங்கள்தாம். பெயர் எம்மொழியில் இருந்தாலும் அப்பெயர்தாங்கி, தான் சார்ந்த மண், மொழி, சமயம் இவற்றின் அடையாளங்களையும் பண்பாடுகளையும் துறக்காமல் இருக்க வேண்டும். அதுவே மனிதப் பண்பின் அடிப்படை.

லெனின், ஸ்டாலின் போன்று ரஷ்ய மொழியிலும் மார்க்ஸ் போன்று ஜெர்மன் மொழியிலும் அப்துல் ரஹ்மான், முஸ்தஃபா போன்று அரபி மொழியிலும் ஸுப்ரஹ்மண்யம், ஸ்வாமிநாதன் போன்று வடமொழியிலும் ஜான்ஸன், ஜேம்ஸ் போன்று ஆங்கிலத்திலும் (ஜி.யு.போப், கால்டுவெல், இவர்களை நினைவு கூர்க!) பெயருடைய எத்தனையோ தமிழர்கள் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் காத்திடும் பணியில் ஈடுபட்டுள்ளதைத் திருமாவளவன் அறியவில்லயா? கருணாநிதி தமிழ்ப் பெயரா?

'ஆட்டோகிராஃப்' என்ற ஆங்கிலப் பெயரில் வெளியான, சேரனின் தமிழ்த் திரைப் படம், தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்காத நல்ல படமாகத் திருமாவளவனுக்குப் படவில்லையா?

ஆனால், தமிழ்ப் பெயரைத் தாங்கி வரும் தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்ப் பண்பாட்டையே கற்பழிப்பது பற்றி ஏன் திருமாவளவன் சினமுறவில்லை? தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் குத்திக் குதறிச் சீரழிக்கும் காட்சிகள் கொண்ட திரைப்படங்களைக் கண்டு அவர் ஏன் இதுவரை பொங்கி எழவில்லை? இரட்டைப் பொருள் தரும் வசனங்களையும் பாடல்களையும் கேட்டு ஏன் அவர் வெகுளவில்லை?

நடிகை - அவள் கன்னடத்துக் கிளியோ, கேரளத்துக் குயிலோ, ஆந்திரத்து மயிலோ, வடநாட்டு வண்ணப் புறாவோ - கதைப்படி அவள் தமிழச்சி - தமிழ்ப் பெண். அந்தத் தன்மானத் தமிழச்சி, பெயரளவுக்கு உடை என்று சில துண்டுத் துணிகளை மட்டுமே அணிந்து வலம் வருவது பண்பாட்டுச் சீரழிவில்லையா? தமிழச்சியின் தொப்புள் என்பது எத்துணை புனிதமானது? ஒரு தாய்க்கும் மகவுக்கும் இருந்த உயிர்க்கொடியின் அடையாளச் சின்னமல்லவா?

அந்தப் புனிதச் சின்னத்தை மணலால் நிரப்பி, அதில் முட்டை பொரித்து, கோலி விளையாடி, பம்பரம் விட்டு ... எத்தனை விதவிதமாக இழிவு படுத்தித் திரையில் காட்டியுள்ளனர்; காட்டுகின்றனர்?

பாடல் காட்சி என்று பெயர் வைத்துக் கொண்டு, அதில் நேரடி உடலுறவைத் தவிர மீதி அனைத்து அசைவுகளையும் ஆபாசக் குறிப்புகளையும் படமாக்கி, தொலைக் காட்சி வழியாக ஒவ்வொரு வீட்டு வரவேற்பறையையும் பள்ளியறைப் பயிலரங்காகப் பரிணமிக்கச் செய்த பெருமை, திரைத்துறையினரைச் சார்ந்ததல்லவா?

இதற்கு எதிராகத் திருமா ஏதாவது ஒரு பெரும் போராட்டம் நடத்துவாரா? அல்லது அவரும் திரைப்பட நடிகராகிவிட்டதால், நீர்த்துப் போவாரா? அவர் தம் செயலால் விடை தருவாரா?

அடுத்த அடிக்குப் பொறுத்திருப்போம்


........... மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!

- கமாண்டோ



2 Comments:

Anonymous Anonymous said...

கமாண்டோ அடித்த அடி திருமாவளவனுக்கு வலிக்குமா?

திருமாவின் email address தெரிந்த யாராவது இதை அவருக்கு அனுப்பித் தந்தால் நல்லது.

அழகன் மைந்தன்

December 04, 2005 8:29 am

 
Blogger பாபு said...

//நம் மக்களின் பெயரைத் தமிழ்ப் படுத்துவதாலோ, திரைப்படங்களின் பெயரைத் தமிழில்தான் வைக்க வேண்டும் என்று போராடுவதாலோ தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப் படுவதில்லை.

பெயர் ஓர் அடையாளம் மட்டுமே.//

சரியாகச் சொன்னீர்கள். பெயர்ந்து விழுவதால் தான் 'பெயர்' என்கிறோம்.

இப்போதெல்லாம் 'பேருக்கு'த் தான் இவர்களின் போராட்டங்கள் - அதுவும் 'பெயரளவில்'.

February 24, 2006 11:22 am

 

Post a Comment

<< Home