நாட்டு நடப்பில் நமது அதிரடி

Friday, March 03, 2006

விளம்பர அடி

இது பொருளியல் காலம். பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்தே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்தையில் பொருள் விற்க வேண்டுமென்றால் விளம்பரம் வேண்டும். சந்தை நிலைத்து (மார்க்கட் ஸ்டெடியாக) இருப்பதற்குத் தொடர்ந்து 'அதிரடி' விளம்பரங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் அது 'டல்'லாகிவிடும். விளம்பரம் என்பது தொடர் வண்டியை இழுத்துச் செல்லும் பொறிவண்டி(என்ஜின்) போன்றது. (புகை வண்டி என்ற சொல் மின் வண்டிகள் வந்த பின் பொருத்தமற்றதாகி விட்டது) வண்டி நிலையத்தில் சேர்ந்து விட்டதே என்று பொறிவண்டியை நிறுத்தி விட்டால் தொடர்வண்டி நின்ற இடத்திலேயேதான் நிற்கும்; நகராது.

பொறிவண்டி போன்றதே விளம்பரமும். பொறிவண்டி ஓடினால் மட்டுமே தொடர்வண்டி நகர்வது போல விளம்பரம் ஓடினால் மட்டுமே சந்தையில் பொருள் விலை போகும்.

விளம்பரத்திற்காகப் பலரும் பல உத்திகளைக் கையாள்வர். அவற்றிலொன்றுதான் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்வது, தடை மற்றும் இழப்பீடு கோருவது போன்றவை.
தமிழ்த் திரைப்பட நடிகை குஷ்பு அண்மைக் கால 'மேக்ஸிம்' இதழிடமிருந்து 3 கோடி ரூபாய் இழப்பீடு கோருவதாக வெளியாகியுள்ள செய்தி, இவ்விளம்பர வகையைச் சார்ந்ததே என நம்புவதற்கு நிறைய இடமிருக்கிறது (தமிழுலகம் தம்மை மறந்துவிடக் கூடாது என்பதில் குஷ்பு மிக்க முனைப்புடன் உள்ளார்). மிகக் குறைந்த அளவிலான, உள்ளிருப்பவற்றை வெளிக்காட்டும் (Transparent) இரு துணித் துண்டுகள் அணிந்த(மேலே ஒரு கைக்குட்டை; கீழே ஒரு கைக்குட்டை) ஒரு பெண்ணின் புகைப் படத்தில் தம் தலையைப் பொருத்தி வெளியிட்டதால் தம் மானம் கப்பலேறி விட்டதாகவும் இழப்பீடு பெற்றுக் கொண்டால் அம்மானம் கரையிறங்கித் தம்மோடு ஒட்டிக் கொள்ளும் என்பதாகவும் கூறி அந்த ஆங்கில இதழ் மீது குஷ்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.


எத்தனையோ திரைப் படங்களில் இதே போன்ற உடை அணிந்து ஆடிக் காட்டியவர்தாம் குஷ்பு. ஆபாச அசைவுகளுடனும் அதைவிட ஆபாச வர்ணனைகளுடனும் கூடிய பாடல் காட்சிகளில் நடித்துக் 'கலைச் சேவை' செய்துள்ளதை குஷ்புவுக்குக் கோயில் கட்டிய தமிழ்ப் பக்த கோடிகள் மறந்திருக்க மாட்டார்கள். எனினும் குஷ்புவின் பக்தர்களல்லாதவர்க்கு நினைவூட்டச் சில. . . . .

ஒரு திரைப் படத்தில், குஷ்பு காய்-கனிச் சந்தையில் நடந்து வரும்போது அவரது 'மார் கட்டை' வர்ணிக்கும் கதாநயகன்,
" மாங்கா மாங்கா குண்டு மாங்கா
மார்க்கெட்டுப் போகாத ரண்டு மாங்கா. . . . "
என்று பாடி ஆடும் காட்சியில், ரசிகர்களைத் தூக்கமிழக்க வைத்தக் குஷ்புவின் 'மார்க் கட்டு' அசைவுகள்......

பருத்த, பெரிதான தேங்காய்களுக்குப் புகழ் பெற்றது வட இலங்கையின் யாழ்ப்பாணம். ஒரு திரைப் படத்தில் கதாநயகன்,
"ஓ ரங்கா ஸ்ரீலங்கா கொப்பரத் தேங்கா
இங்கே பாருங்க நார்த்தங்கா முத்தின மாங்கா "
என்று உயர்ந்த இலக்கிய நடையில் குஷ்புவின் முன்(சொன்ன) பகுதியை விளக்கிப் பாடி நடித்த காட்சியில் குஷ்பு இழுத்துப் போர்த்திக் கொண்டு நடிக்கவில்லை; பாடலில் வர்ணித்த பகுதிகளைத் தாராளமாக 'மார்கெட்டிங்' செய்தே நடித்திருந்தார்.

குஷ்பு மட்டும்தாம் திரைப் படத்தில் மாங்கா, தேங்காயை மார்கெட்டிங் செய்தாரா? வேறு யாருமே செய்யவில்லையா? என்று குஷ்புவின் பக்தர்கள் வினவலாம்.
பழங்காலத் திரைப் படப் பாடல் காட்சியொன்றில் மாம்பழம் விற்கும் பெண்ணாய் நடித்த நடிகை,
" தொட்டுப் பார்த்துத்தான் தெரியணுமா
தோற்றத்தைப் பார்த்தா தெரியாதா
ஒட்டு மாங்கனி இனிக்குமுங்க
செக்கச் செவந்ததுங்க
சேலம் குண்டுங்க
அட வாங்க, இதை வாங்க "
என்று பாடிய போது இத்தனை ஆபாசமில்லைதான்.

இடைக்காலத்தில் ஒரு நடிகை,
"மாம்பழம் வாங்குங்கோ - இது மல்கோவாப் பழமுங்கோ
எல்லாம் வித்துப் போச்சுங்கோ இருப்பது ரண்டு தானுங்கோ
மல்கோவா அட மல்கோவா "
என்று பாடி ஆடிய போதும் குஷ்பு அளவுக்கு 'மார் கட்டிங்' செய்ததில்லை.

மற்றொரு திரைப் படத்தில், ஊடுருவும் (Transparent) மேலாடை அணிந்த கதாநாயகி நடிகையின் முந்தானையில் ஒளித்து வைத்திருந்த
மாங்காய்களைப்பறிக்க வந்த முதிய கதாநயகன்,
" பறிச்சாலும் துணி போட்டு மறச்சாலும் பெண்ணே
பளிச்சென்று தெரியாதோ இளமாங்கா முன்னே "
என்று பாடிய போது அந்நாயகியும்

இன்னுமொரு திரைப் படத்தில் அதே நாயகன், .
" கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ" என்று கேட்டதற்கு,
"நானே தரும் காலம் வரும் ஏனிந்த அவசரமோ"
என்று விடையளித்த மற்றொரு நடிகையும் குஷ்பு அளவுக்குக் காட்டவில்லை

வேறொரு படத்தின் பாடல் காட்சியில்
"மாங்கனிகள் தொட்டிலிலே ஆடுவதேன் கண்ணே " என் வினவியவனுக்கு,
"மாலையிலே பறிமாற மன்னவனின் பசியாற"
என்று விடையளித்த நடிகையும் குஷ்பு அளவுக்குக் காட்டவில்லை

" தேங்காயிலே பாலிருக்கும்
அதை வாயாரக் குடிச்சா சூடு தணிக்கும்
ஓடு மட்டும்தான் மேலிருக்கும்
அது கைத் தொழில் வேலைக்குக் கை கொடுக்கும்
எளசானாத் தண்ணியிருக்கும்
முத்திப் போனா என்னயிருக்கும்
உப்புக் கரிக்கும் மக்குப் பயலே சப்புண்ணிருக்கும் "
என்று 'ஏழு வயசிலே எளனி ( தேங்காய்) வித்த' நடிகையும் இந்த அளவுக்குத் 'துணிய(விழ்க்க)'வில்லை.

'மேக்ஸிம்' என்பது ஆங்கில மொழியில் வெளி வரும் இதழாகும். புதிதாக இந்தியாவில் அறிமுகமாகித் தடம் பதிக்க முயலும் இதழாகுமது. இந்தியாவில் ஆங்கிலச் செய்தித் தாள்களையே மேல் தட்டு மக்கள்தாம் படிப்பர். இந்நிலையில் மேக்ஸிம் போன்ற ஆண்களுக்கான இதழை எத்தனைபேர் படித்து விடுவர்? விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலானோர் படிக்கும் இதழில் வெளிவந்த படத்தால் (அதுவும் அப்படம் 100% போலி என்று அப்படத்தின்கீழ் அடிக் குறிப்பு உள்ளதாகச் செய்தி) மானம் போய் விட்டதாகக் கொதிக்கும் / குதிக்கும் குஷ்பு, படிப்பறியாப் பாமரர் முதல் பள்ளிச் சிறுவர் உட்பட அனைத்து நிலை மக்களும் பார்த்து மகிழும் திரைப் படத்தில் அவரால் காட்டப் பட்ட ஆபாச அசைவுகளுக்கு எந்த நீதி மன்றத்துக்குப் போனார்? இன்றளவும் வீடுகளின் வரவேற்பறைகளில் தொலைக் காட்சி வழியாக குஷ்புவின் 'சந்தைப் பரிமானம்' கொடிகட்டிப் பறப்பது தொடர்கிறதே?
இந்தியாவில் - குறிப்பாக வட நாட்டில் - குஷ்புவை விட அழகிலும் இளமையிலும் வளமையாகவும் செழுமையாகவும் திகழ்கின்ற எத்தனையோ நடிகையர் இருக்கும்போது, குஷ்புவின் தலையை எதற்காக அந்த இதழ் ஒட்டி வெளியிட வேண்டும்?

ஏனெனில் வேறெந்த நடிகையரும் தமக்கில்லாத கற்பைப் பற்றிப் பெருமையாக குஷ்பு அளவுக்குப் பேட்டியளித்ததில்லை.அந்தப் பேட்டி காரணமாய் அனைத்திந்திய அளவில் குஷ்பு பெற்றிருந்த புகழை அவ்விதழ் , 'முதலீடாக்க' முனைந்தது. அதன் ஒப்பந்தமே அவ்வொட்டுப் படம்.

குஷ்புவின் வழக்கு 'விளம்பர உத்தி'யேயன்றி வேறில்லை. 'மார்க் கட்டு'ப் போய்விட்ட நடிகை குஷ்புவுக்கும் விளம்பரம்; புதிதாக மார்க்கெட்டில் புகுகின்ற மேக்ஸிம் இதழுக்கும் விளம்பரம். "ஒரு கல்லில் இரண்டு மாங்காய்" . ( குஷ்பு 'மேட்டர்' என்றாலே மாங்காய் தனாகவே பழுத்து விடுகிறது) இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இது பற்றிய செய்திகளைத் தந்து, தம் ஜனநாயகக்(?) கடமையை நிறைவேற்றி விட்டன.

இனி, "நீதி மன்றத்துக்கு வெளியே உடன்பாடு" என்று 'இழப்பீடு நாடக'த்தின் அடுத்த காட்சி தொடரும் என்று எதிபார்க்கலாம்.

அடுத்த அடிக்குப் பொறுத்திருப்போம்.

........................................... மாட்சியில்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே!



0 Comments:

Post a Comment

<< Home