பாதுகாப்பு அடி
இம்மாதம் 18ஆம் தேதி, தமிழகத்தின் தொழில் நகரமான ஈரோட்டில், விஷ்வ ஹிந்து பரிஷத் 'இந்து சமுதாயப் பாதுகாப்பு மாநாடு' ஒன்றை நடத்தியது பற்றி நாளேடுகள் செய்திகளைத் தந்திருந்தன.

சிவன் மட்டுமே கடவுள்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்று வணங்கும் 'சைவ' மதமும் விஷ்னு மட்டுமே உயர்ந்த கடவுள்; மற்றது எதுவுமே கடவுள் இல்லை என்று கூறும் 'வைணவ'மும் சக்திதான் பெரிது; சக்தி இல்லையேல் சிவமே இல்லை; அவளே ஆதி என்று சக்தியை வணங்கும் 'சாக்த'மும், குமரனே (குமாரன் அல்லன்) கடவுள் எனப் பேசும் 'கெளமார'மும் கணபதிதான் ஆதி; அவனே மூலம் என்று அவனை வணங்கும் 'காணாபத்ய'மும் சூரியன் தான் கடவுள்; ஒளி இன்றேல் உலகமே இல்லை என்று சூரியனை வணங்கும் 'செளர'மும் 'ஷண்மதங்'களாக -ஆறுமதங்களாக- இத்தேசத்தில் இருந்தன.
அவற்றுக்கிடையே போட்டிகளும் யார் பெரியவர் என்ற வாதங்களும் நிறைய நடந்திருந்தன. கேரளத்தில், காலடியில் பிறந்த ஆதிசங்கரர் இந்த ஷண்மதங்களையும் இணைத்து, 'இந்துமதம்' என்ற ஒன்றாக்கி, அதன் சேவைக்காகவும் வளர்ச்சிக்காகவும் இந்தியாவின் நான்கு மூலைகளில் நான்கு சங்கர மடங்களையும் நிறுவினார். வடக்கே காசி தெற்கே ஷ்ருங்கேரி, கிழக்கே பூரி, மேற்கே த்வாரகா என அவை நிலைகொண்டுள்ளன.
ஆதி சங்கரர் நிறுவிய மடங்களின் சேவையினால் 'இந்து மதம்' என்று பிற்காலத்தில் அறியப் பட்டுப் பின்பற்றப்படும் மதத்தில் ஆறு கடவுள்கள் போக அய்யப்பனும் ஏழாவது கடவுளாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளான். அதனால் இந்து மதத்துக்கோ இந்து சமுதாயத்துக்கோ எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடவில்லை. மேலும் இந்தியாவின் நிரந்தரப் பிரச்சனைப் பெயரான 'பாபர்' பெயரில் கூட (வாவர்சாமி) ஒரு சிறு தெய்வம் சபரிமலையில் குடிகொண்டுள்ளது. இதனாலும் இந்து மதத்துக்கு எந்த ஆபத்தும் நேரிட்டுவிடவில்லை; இந்து சமுதாயத்துக்கும் ஆபத்தில்லை. மாறாக சினிமா ஸூப்பர் ஸ்டார்களின் படையெடுப்பால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுத் திகழ்கின்றது.
குன்றுதோறாடுவது குமரக் கடவுள் மட்டுமல்லன்; திருப்பதி மலை வாழும் வெங்கடேசனும் அய்யப்பனும் மலைக் கடவுள்களாகிவிட்டனர். அவ்வப்போது எழும்,'யார் பெரியவர்' என்ற சிறிய பிரச்சனைக்கு, "அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதார் வாயில் மண்ணு" என்று தற்காலிகத் தீர்வு காணப்படும்.
ஏழு கடவுள்கள் போக ரஜ்னீஷ், சாய் பாபா, சிவசங்கர் பாபா, யாகவா முனிவர், பங்காரு அடிகள், மாதா அம்ருதானந்த மயி எனப் பல கடவுள்கள் தோன்றியும் இந்து மதத்துக்கு ஆபத்து நேரிட்டுவிடவில்லை; இந்து சமுதாயத்துக்கும் ஆபத்தில்லை.
பின் யாரிடமிருந்து இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வி.இ.ப.வினர் மாநாடு கூட்டுகிறார்கள்?
மதமாற்றத்தைத் தடுத்து மதத்தைப் பாதுகாக்கப் போகிறார்களாம்.
இந்த தேசத்தை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்ட முகலாயர்கள் இந்துக்களை மதம் மாற்ற உண்மையாக முயன்றிருந்தால் இன்று இந்துக்கள் சிறுபான்மையினராயிருப்போம். இந்த நாட்டை இருநூறு ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலேயன் ஒழுங்காக 'ஹோம் ஒர்க்' செய்திருந்தால் இந்நாடு மற்றொரு கத்தோலிக்க நாடாயிருக்கும். ஆட்சியும் அதிகாரமும் கொண்டிருந்த அவர்களால் முடியாததை இன்று சில மிஷனரிகள் செய்து வெற்றி பெறுகின்றன என்று கூறுவது இந்து சமுதாயத்தின் பலவீனத்தைத்தான் வெளிப்படுத்தும்.
பாலுக்கும் ரொட்டிக்கும் கோதுமைக்கும் பணத்துக்கும் மதம் மாறுகிறர்கள் என்று கூறுவது இந்துக்களை அவமதிப்பது போலாகும். ஏன் மதம் மாறுகின்றனர் என்று உண்மையான அக்கறையுடன் சிந்தித்தால் மட்டுமே உரிய விடை கிடைக்கும்.
ஒரு விபத்தில் தன் கணவனைப் பறிகொடுத்துவிட்டு வாழ வழி தெரியாது நான்கு குழந்தைகளுடன் திக்கற்று நின்ற 26 வயதுடைய மகேஸ்வரிக்குப் பஞ்சாயத்துத் தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் வேலை தரப்பட்டது.

காரணம்:- மகேஸ்வரி ஒரு, 'தலித்' என்பதுதான்.
இவ்வாண்டு கோலாகலத்துடன் இந்தியாவின் குடியரசு தினம் கொண்டாடப் பட்டது. வீர மராட்டியர் வாழும் மாநிலத்தில் R.S.Sஇன் தலைமைச் செயலகம் உள்ள மஹாராஷ்டிர மாநிலத்தின் நாஸிக் மாவட்டத்தில், அரசுப் பள்ளி மைதானத்தில், மராட்டிய அரசு உத்தரவுப்படி தேசீயக் கொடி ஏற்றச் சென்ற சுனிதா பாபு ராவ் கோடெராவ் என்ற பெண் பஞ்சாயத்து ஊழியை , பள்ளி முதல்வராலும் மற்றவர்களாலும் தடுத்து நிறுத்தப் பட்டாள். அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவளைக் கொடியேற்ற அனுமதிக்கவில்லை.
காரணம்:- சுனிதா ஒரு,'தலித்'.
திண்ணியத்தில் மலம் திண்ண வைக்கப் பட்டான்.
காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.
பாப்பாப் பட்டியிலும் கீரிப்பட்டியிலும் நாட்டார் மங்கலத்திலும் அவனுக்கு ஜனநாயகம் வழங்கிய அடிப்படை உரிமை மறுக்கப் படுகிறது.
காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.
செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக அவன் கொடுமையாகக் கொல்லப் படுகிறான்.
காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.
இன்றும் பற்பல ஊர்களில் அவனால் கடைக்குள் உட்கார்ந்து தேநீர் குடிக்க முடியவில்லை. வெளியில் நின்று குடிப்பதற்கும் தனிக் குவளை.
"நீங்களெல்லாம் சுத்தமில்லாதவா; உங்கத் தெருவுக்கெல்லாம் ஸ்வாமி வராது" என்று சங்கரச்சாரி சொல்வார்.
சரி, சாமி இருக்கிற தெருவுக்கு வந்து தேரை இழுப்போம் என்று போனால் அதற்கும் தடை.
காரணம்:- அவன் ஒரு, 'தலித்'.
இவர்களெல்லாம் சமுதாயத்தில் மானம், மரியாதையுடன் வாழ, மற்றவர்களைப்போல் மனிதனாக மதிக்கப்பட அடங்காத் தாகம் கொண்டு தேடிப் போகும் ஆறுதான் 'மதமாறு' என்பது.
'ஆறுமதத்தில்' கிடைக்காதது 'மாறும்மதத்தில்' கிடைக்கும் என்று போகிறார்கள்.
'ஆறுமதத்தில்' கிடைக்காதது 'மாறும்மதத்தில்' கிடைக்கும் என்று போகிறார்கள்.
இந்து சமுதாயத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால், வி.இ.ப.இந்த இன ஒதுக்கலை முதலில் இந்து சமுதாயத்திலிருந்து நீக்க மாநாடு போடட்டும்.
எனில்,மாநாடு இன்றியே இந்து சமுதாயம் பாதுகாக்கப்படும்.